உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும் நான்கு அணிகளைக் கணிக்கச் சொன்னால், அனைத்துக் கணிப்புகளிலும் தவறாது இடம்பெறக்கூடிய அணி இங்கிலாந்து. ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா?
1992-க்குப் பிறகு, 2015 வரை இரு முறை மட்டுமே உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. 1996, 2011 என இரண்டு முறையும் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது. 2015-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
2015 படுதோல்வி இங்கிலாந்தைப் பெரிதளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புரட்சியை உண்டாக்கிய இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து, 2019-ல் லார்ட்ஸில் உலகக் கோப்பையை ஏந்தியது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை அளித்தது, ஸ்டிரைக் ரேட்டை அதிகரித்தது, நிறைய வெள்ளைப் பந்து ஆட்டங்கள் விளையாடியது என இயான் மார்கன் தலைமையில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கான பலனையும் இங்கிலாந்து அனுபவித்தது.
இயான் மார்கன் ஓய்வுக்குப் பிறகும் இதே பாணியைக் கடைப்பிடித்து வரும் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா?
கடந்த உலகக் கோப்பைக்குத் தயார் ஆனதைப்போல இந்த முறை இங்கிலாந்து தயாராகவில்லையோ என்கிற எண்ணம் வருகிறது. மற்ற அணிகள் உலகக் கோப்பைக்காக 50 ஓவர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் திட்டமிட்டது. பிறகு உலகக் கோப்பைக்காக ஒரு டி20 ஆட்டம் குறைக்கப்பட்டு, ஒருநாள் தொடரில் கூடுதலாக ஒரு ஆட்டம் சேர்க்கப்பட்டது.
இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக மேத்யூ மாட் நியமிக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
ஆஸ்திரேலிய அணி கடந்த இரு மாதங்களில் மட்டும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கும், வங்கதேசத்துக்கும் எதிராக 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஆசியக் கோப்பையை விளையாடிவிட்டு வருகின்றன.
இங்கிலாந்தோ கடந்த 13 மாதங்களில் வெறும் 9 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது.
காயம் காரணமாக இடைவெளி எடுத்துக்கொண்ட ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜூலையில் தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்குப் பிறகு, நியூசிலாந்து தொடரில்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்கள். ஓய்விலிருந்து திரும்பி வந்துள்ள பென் ஸ்டோக்ஸும் கடைசியாக கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற அதே தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூசிலாந்து தொடரில் தான் விளையாடினார்.
2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 88 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து, 2019 – 2023 உலகக் கோப்பைகள் இடையே வெறும் 43 ஒருநாள் ஆட்டங்களில்தான் விளையாடியுள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட அயர்லாந்துக்கு எதிரான தொடரில் உலகக் கோப்பைக்குத் தேர்வான வீரர்கள் விளையாடவில்லை.
கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த ஜோ ரூட் 2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 78 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். இதே ஜோ ரூட் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு வெறும் 19 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்த மாற்றம் வீரர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடிய பேர்ஸ்டோ மொத்தம் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜோ ரூட் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் பழைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக, அயர்லாந்துக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளும்படி தாமாக கேட்டுக்கொண்டார் ஜோ ரூட். ஆனால், மழை காரணமாக அந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இந்தியாவுடனான பயிற்சி ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிராக களத்தில் நேரத்தை செலவிட்ட ரூட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இருந்தபோதிலும் பென் ஸ்டோக்ஸ் வருகை, மிக நீண்ட பேட்டிங் வரிசை, வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் எனப் பெரும் படையை வைத்துள்ளதால் இங்கிலாந்தும் அபாயகரமான அணியாகவே உள்ளது.
டேவிட் மலான் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 92.33 சராசரியில் 277 ரன்கள் குவித்துள்ளார். தொடக்க பேட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டால் கடைசி நேரத்தில் ஜேசன் ராய்-க்குப் பதில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட இங்கிலாந்தின் புதிய நட்சத்திரம் ஹாரி புரூக் அதிரடி காட்ட உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து திரும்பி வந்ததுபோல் அல்லாமல் நியூசிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் முழுநேர பேட்டராக மட்டுமே விளையாடுகிறார். என்றாலும்கூட அணியின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருப்பதே எதிரணிக்கு அழுத்தத்தை உண்டாக்கும்.
மொயீன் அலி, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுப்பது மட்டுமில்லாமல் சுழற்பந்துவீச்சில் ஒத்துழைக்கவுள்ளார்கள். லிவிங்ஸ்டன் சூழலுக்கு ஏற்ப ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் என இரண்டையும் வீசக் கூடியவர். பேட்டிங்கிலும் இவர் நல்ல ஃபார்மில் உள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பிரதான சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் இந்த அணியில் மிக முக்கியமான தாக்கத்தை உண்டாக்கப் போகிறார். அனைத்து வகையான ஸ்பின் வகைகளும் இருப்பது இங்கிலாந்துக்குக் கூடுதல் பலம்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி பெரும்பாலும் ஒவ்வொரு பணிக்கும் இருவரை வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் இருக்கிறார்கள். இடக்கை வேகப்பந்துவீச்சுக்கு டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே இருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது.
அதிவேகப்பந்துவீச்சுக்கு மார்க் வுட் இருக்கிறார். இந்தியாவில் நடைபெறுவதால் இவரது வேகம் இங்கிலாந்துக்கு நிச்சயமாக நடு ஓவர்களில் உதவும். உலகக் கோப்பைக்கான அணியில் இல்லாதபட்சத்திலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மாற்று வீரராக அணியுடன் பயணிக்கிறார்.
விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பார்த்தால் தயார் நிலையில் இல்லாத அணியாகத் தோற்றமளித்தாலும், உலகக் கோப்பையை வெல்வதற்குத் தேவையான மிக நீண்ட பேட்டிங் வரிசை, ஆல்-ரவுண்டர்கள் என பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து உள்ளது.
இங்கிலாந்து அணி:
ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட், ஹாரி புரூக், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே, கஸ் அட்கின்சன்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக அக்டோபர் 29-ம் தேதி லக்னௌவில் விளையாடுகிறது. இதுதவிர, இங்கிலாந்து விளையாடும் பெரும்பாலான ஆடுகளங்கள் மும்பை, கொல்கத்தா, தரம்சாலா என பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களாகவே உள்ளன.
சூழல்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலகக் கோப்பையைத் தக்கவைக்குமா இங்கிலாந்து..?