உயர்நீதிமன்றம் சென்னை மற்றும் மதுரை கிளைகளில் காலியாக உள்ள 75 சட்ட ஆராய்ச்சி உதவியாளர் (Research Law Assistant) காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.
உயர்நீதிமன்றம், சென்னை மற்றும் மதுரைக் கிளையில் செயல்பட்டு வரும் நீதிபதிகளுக்கு ஆராய்ச்சி உதவி கடமைகளை மேற்கொள்ளும் வகையில் சட்ட ஆராய்ச்சி உதவியாளர் (Research Law Assistant) காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. சட்டம் படித்த பட்டதாரிகள், டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொத்த 75 இடங்களுக்கு ஆள்சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 30 வயதை பூர்த்தி செய்திருக்க கூடாது. இந்த விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளுக்கு முந்தைய 5 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். அதாவது, 5 ஆண்டுகளுக்கு முன்னதாக சட்ட படிப்பில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. சட்ட படிப்பில் முதுநிலை பட்டம் படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வருகைப்பதிவு கட்டாயம் தேவைப்படும் படிப்பைத் தொடரும் விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கின் போது வாத, பிரதிவாதங்களை குறித்து வைத்துக் கொள்ளுதல்; நீதிமன்ற வரைவு உத்தரவுகளை தயாரிப்பதற்கு தேவையான ஆய்வுகளுக்கு உதவுதல்; நீதிபதிகளின் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பதற்கு தேவையான பணிகளை செய்தல்; நீதிபதிகள் அளித்த உத்தரவைப் பற்றிய விளக்கக் குறிப்பை (Judgement headnotes) தயாரித்தல் ஆகியவை முக்கிய பணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். உயர்நீதிமன்றம், சென்னை மற்றும் மதுரைக் கிளை என இரண்டு இடங்களில் பணி அமர்த்தப்படுவர். இந்த வேலையின் காலம் ஓராண்டு ஆகும். மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.30,000 வழங்கப்படும். நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் https://www.mhc.tn.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.12.2023-க்குள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல் முகவரி mhclawclerkrec@gamil.com ஆகும். தபால் முகவரி: The Registrar General, High Court, Madras – 600 104. உரிய தகுதியும் ஆர்வமும் உள்ள வக்கீல்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.