இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கிற 193 நாடுகளில் 57 தேசங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளாக உள்ளன.
மற்றும் உலக அளவில் 72 நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இந்தியத் திருநாட்டில் 142 கோடி மக்களில் 25 கோடி பேர் முஸ்லிம்கள் என அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய உலகில் வாழும் 800 கோடி மக்களில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாண்டு பக்ரீத் பண்டிகையை-ஈதுல் அல்ஹாவை-ஹஜ் பெருநாளை-தியாகத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்திய முஸ்லிம்கள், “”””ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா – பாருக்குள்ளே உள்ள நாடுகளில் சிறந்தது இந்தியா”” என்று நம்பி வாழும் பெருங்கூட்டம் ஆகும்.
இந்தியா ஆன்மீக பூமி, அமைதியின் பிறப்பிடம்; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று பரப்புரை செய்யும் புண்ணிய பூமி, இங்கே வாழும் 4,698 வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் யாவரும், இந்திய மக்கள் ஆவர். வேற்றுமையில் ஒற்றுமை காணும் உன்னதமான குடிமக்கள். இந்திய மக்களைப் போல் எங்கும் இல்லை; உலகில் வேறு எவரும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளவர்களே இந்த நாட்டு மக்கள். அங்கங்கே சிலர் சில வேண்டத்தகாத குழப்பங்கள் நிகழ்வதைக் கண்டு, இந்திய மக்களின் வாழ்வைப் பற்றி தவறான கருத்துச் சொல்லக்கூடாது.
இந்திய மக்கள் ஒருதாய் மக்கள்; பல மொழி, பலமதம், பல கொள்கை, பல கலாச்சாரம் உள்ளவர்கள்; ஆனால், மனிதநேயத்தில், மனிதாபிமானத்தில், உதவுவதில், உபசரிப்பதில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில், எல்லாருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள்தாம்.
இத்தகைய சிறந்த நாட்டு மக்களாக வாழும் முஸ்லிம் சமுதாயம், தனது ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறது. ஈத் பெருநாள் வாழ்த்துக்களை எல்லோருக்கும் கூறுவோம்.
இந்தப் புனிதமான தியாகத் திருநாளில் ஒற்றுமை பேணிடவும், ஒழுங்கு முறையில் வாழ்ந்திடவும், உள்ளும் புறமும் அமைதியை உருவாக்கிடவும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவு, நட்புநலம் பெருகிட பாடுபடவும், உறுதி ஏற்போம்.
இந்தியத் திருநாடு ஜி-20 தலைமை வகிக்கும் இந்த ஆண்டில் உலக அமைதிக்கும் குரல் கொடுத்து வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் போரால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானதாகும்.
இந்திய முஸ்லிம்கள் தங்களின் தியாகத் திருநாளில் செய்யும் பிரார்த்தனையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தொடரும் போரை நிறுத்திடவும், அமைதிவழியில் ஆக்கப்பூர்வ பயணத்தில் உலகை இட்டுச் செல்லவும் வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவோம். ரஷ்ய அதிபர் புதின், இந்திய முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் பிரார்த்தனைக்கு உடன்படவும் வேண்டுவோம்.
“எல்லோரும் இன்புற்று இருப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியோம் பராபரமே”
இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.