இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில் இங்கிலாந்து- இந்தியா இடையே நடைபெற இருக்கு டெஸ்ட் மேட்ச் போட்டி மைதானம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. சௌதாம்ப்டனில் ஏஜஸ் பௌல் மைதானத்தில் 2027-ல் முதன்முறையாக ஆஷஸ் ஆட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற ஜூலை 17-ம் தேதி மகளிர் ஆஷஸ் ஆட்டம் முதன்முறையாக இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.
2027 மகளிர் ஆஷஸ் தொடர், ஹெடிங்க்லி மைதானத்தில் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல, 2027 ஆஷஸ் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லார்ட்ஸ், கியா ஓவல், டிரென்ட் பிரிட்ஜ், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2031 ஆஷஸ் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்டு, ஹெடிங்க்லி, டிரென்ட் பிரிட்ஜ் ஆகிய மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. ஏஜஸ் பௌல் மைதானத்தில் 2011-ல் முதல் டெஸ்ட் ஆட்டம் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. 2014, 2018 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ல் பயோ-செக்யூர் (Bio-secure) முறையில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்கள் இங்கு நடைபெற்றன.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 2025-ல் நடைபெற உள்ள ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், ஹெடிங்க்லி, எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்ட் ஆகிய மைதாங்களில் நடைபெற உள்ளன. 2029-ல் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்ட், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறுமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

