ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் எனலாம். சக்தி வாய்ந்த பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவப்பெருமான் ஆடி மாதத்தினை அம்மன் மாதமாக இருக்க வரம் கொடுத்தார்.
இம்மாதத்தில் சிவப்பெருமானின் சக்தியை விட அம்மனுடைய சக்தி அதிகரித்து காணப்படும். இம்மாதத்தில் வரும் ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளிக்கிழமைள் சிறப்பு வாய்ந்தவையாகும். ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழா போல களைக்கட்டும்.
வீட்டில் உள்ள பெண்கள் சிறப்பு பூஜைகளை செய்வார்கள் பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல் போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் இம்மாதத்தில் வழக்கம்.
ஆடி மாதமும் கூழும்:
ஆடி மாதம் என்றாலே எல்லோர் நினைவுக்கும் வருவது கூழ் தான் கோவில் ,வீடுகளில் கூழ் ஊற்றி மகிழ்வர் இம்மாதத்தில். ஜமத்கனி முனிவர் என்பவர் தவத்தில் சிறந்து விளங்கியவர். கார்த்த வீரியாசுனனின் மகன்கள் பொறாமையின் நிமித்தம் முனிவரை கொன்று விடுகின்றனர்.
இதனை அறிந்த ஜமத்கனி முனிவரின் மனைவியான ரேணுகாதேவி வருத்தத்தை ஏற்க முடியாமல் உயிரை விட துணிந்து தீயை மூட்டி அதில் இறங்கினார். அச்சமயத்தில் தீயை அணைக்க இந்திரன் மழையாக மாறினார். தீயில் இறங்கிய ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் உருவாகின. அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து தனது வெற்றுடலை மறைத்து ஆடையாக அணிந்தார்.
பிறகு ரேணுகாதேவி பசியுடன் இருந்ததால் கிராம மக்களிடம் சென்று உண்ண உணவு கேட்டார். கிராம மக்கள் ரேணுகாதேவியின் பசியை போக்க அவருக்கு வெள்ளம், பச்சரிசி, இளநீரை உணவாக வழங்கினர். இதை வைத்து கொண்டு கூழ் தயாரித்து உணவருந்தினார்.
இதனை அறிந்த சிவப்பெருமான் ரேணுகா தேவியிடம் தோன்றி “நீ அணிந்த வேப்பிலை உலக மக்களின் அம்மை நோயை போக்க சிறந்த மருந்தாகும்”.
ஆடிக்கஞ்சி:
“உணவில் சிறந்தது நீ உண்ட கூழாகும்”. “நீராகாரத்தில் இளநீர் சிறந்தது”. என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தால் தான் கோவில்கள், வீடுகளில் கூழ் ஊற்றுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது.
அது மட்டுமல்லாமல் ஆடி மாதத்தில் காற்றானது சற்று அதிவேகமாகவே வீசும். இதனால் தூசி பரவி அனைவருக்கும் காய்ச்சல் வரக்கூடும், பல நோய்களும் ஏற்படும். அதனைப் போக்கவே ஆடிக்கஞ்சி என்று அழைக்கப்படும் கூழை ஊற்றி அனைவரும் அருந்துகிறார்கள்.
– தே.சுகன்யா