’’காவல் துறை உங்கள் நண்பன்’’ என்று காவல் நிலையங்களிலும் பொது இடங்களிலும் அறிவிப்புகளை பார்க்கிறோம். ஆனாலும், காவல் நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்ல தயக்கம் காட்டுவதையே காண்கிறோம். 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறை இல்லை என்றால் பொதுமக்களால் நிம்மதியாக இயல்பாக வாழ முடியாது. இந்த எதிர்முரண் இருந்தாலும் போலீஸ் துறையின் கட்டமைப்பில் அவ்வப்போது வரும் சீரமைப்புகள், தேவையான மாற்றங்களை தந்து கொண்டுதான் இருக்கின்றன.
சட்டம்-ஒழுங்கில் தனிக்கவனம் செலுத்தும் அதிகாரிகள் கையில் நிர்வாகம் செல்லும் போது அவர்கள் பொதுமக்களின் மனதுக்கு நெருக்கமாகிறார்கள். அதாவது, அரசாங்கம் ஒவ்வொரு முறையும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆபீசர்களை பணியிட மாற்றம் செய்யும் பொழுது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் அந்த அதிகாரிகள் பொறுப்பு ஏற்பார்கள்.
அப்போது பத்திரிக்கை நிருபர்களை சந்தித்து, “குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அவர்களுடைய செல் நம்பரையும் அறிவிப்பார்கள்” இது ஒவ்வொரு முறையும் நடக்கும். சில அதிகாரிகள் சொன்னது போலவே சிறப்பாக செயல்படுவார்கள்.
இதில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய அதிகாரி அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்., என்றால் மிகையல்ல. தான் பணிபுரிந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கிணை சிறப்பாக நிர்வகித்தவர். ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கியவர். எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கு பணியாமல் தவறு செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யம் பாராமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தவர். தென்மண்டல ஐ.ஜி-யாக பணிபுரிந்த பொழுது கஞ்சா கடத்துபவர்களை கைது செய்து அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி, கஞ்சாப் புழக்கத்தை கட்டுப்படுத்தினார். இதற்காக சென்னை உயர்நீதிமன்றம் இவரை பாராட்டியது.
தற்போது சென்னை வடக்கு மண்டல ஐஜியாக பணிபுரியும் அஸ்ரா கார்க், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டவிரோத செயல்களுக்கு காவல்துறையினர் துணை போகக்கூடாது. அப்படி துணை போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓப்பன் மைக்கில் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அதன் மேல் நடவடிக்கையாக தற்போது 6 உதவி ஆய்வாளர்கள் உள்பட 22 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை நாமும் பாராட்டுவோம்.
–ஆ.கோமதிநாயகம் விசு