”ஆகமப் பயிற்சி பெற்றவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எனவே, தமிழ்நாடு அரசு பயிற்சி பெற்றவர்களை நியமிக்கவேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிய சட்டங் களும், ஆகமப் பயிற்சிக்கான – அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும், பிரதான வேத மதம் என்று பல காலம் அழைக்கப்பட்டு வந்த, அந்நியர்களால் ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்ட மதத்தின் முக்கிய பிரிவுகளான சைவம் (சிவத்தையொட்டியது), வைஷ்ணவம் (விஷ்ணு வைக் கொண்டது) ஆகிய கோவில்களுக்குரிய முக்கிய ஆகமப் பயிற்சிகளை உரியவர்களைக் கொண்டு படிப்பிக்கப்பட்டு, 205 பேர் பல ஆண்டுகளாக அர்ச்சகர் வேலை கிட்டாது – 5, 6 பேர் இறந்தே போன பரிதாபமும் உண்டு – அவர்களுக்கு வயதும் அதிகமாயிற்று.
இட ஒதுக்கீடுபடியே நடந்தது!
இந்த அர்ச்சகர்ப் பயிற்சி தேர்வு தமிழ்நாடு அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீடுபடியே நடந்தது. நீதிமன்றத்தின் நீண்ட கால வழக்குகள் காரணமாக இவர்களுக்கு வேலை கிட்டாத பரிதாபம் ஏற்பட்டது. கிடைத்தவர் களுக்கும் கூட அதைப் பறிக்க வழமையாக ஆதிக்க வாதிகள் முயன்றுவரும் நிலையில், நேற்று (26.6.2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தப்பட்ட வழக் கில் ஒரு தெளிவான தீர்ப்பை ஜஸ்டீஸ் திரு.ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் தந்துள்ளார். இது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.
இத்தீர்ப்பின்படி,
1. ஜாதி அடிப்படையிலோ, பரம்பரை உரிமை (Hereditary) என்ற முறையிலோ அர்ச்சர்களை கோவில் களில் நியமனம் செய்ய முடியாது.
2. ஆகமத் தகுதி – கல்வி கற்றிருப்பவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அர்ச்சகராக சட்டப்படி தடை ஏதும் கிடையாது.
3. முந்தைய தீர்ப்பு ஒன்றின்படி, தமிழ்நாட்டுக் கோவில்களில் ஆகம முறைப்படி அமைந்து பூஜை நடைபெறும் கோவில்கள், அல்லாத கோவில்கள் என்று பிரித்து, அதன்படியேதான் அர்ச்சகர் நியமனம் நடை பெறவேண்டும். அதை ஒரு குழு போட்டுக் கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் குழு அறிக்கை வருகின்றவரை எந்தக் கோவிலிலும் அர்ச்சகர் நியமனம் செய்யப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையை ஏற்காது, அந்தக் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்காமல், ஆகமப் பயிற்சித் தகுதி ஒருவருக்கு இருந்தால், பூஜைக்கு அர்ச்சகராக அவரை நியமிக்கலாம் என்று நேற்றைய தீர்ப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது இத்துறையில் ஒரு Landmark Judgement – குறிப்பிடத்தகுந்த தீர்ப்பு.
குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்!
திட்டமிட்டே இந்து அறநிலையத் துறைக்கெதிராக போர்க் கொடி தூக்கியுள்ள ஆதிக்கவாதிகளான சில ஹிந்து மத அமைப்பினர் என்போர் பல தடைகளை ஏற்படுத்தி இடையறாமல் குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்!
முந்தைய தலைமை நீதிபதி அமர்வு (ஜஸ்டீஸ் பண்டாரி அமர்வு) தந்த தீர்ப்பே சரியான தீர்ப்பு என்று ஏற்றுக்கொள்ள இயலாது.
‘‘ஆகமக் கோவில்கள், ஆகமம் அல்லாத கோவில் கள் என்று கண்டறியவேண்டும் என்பதே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் முக்கிய நோக்கத் தைத் தோற்கடிக்கும் நியாயமற்ற ஒரு தீர்ப்பு ஆகும்.”
தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை இதனை எதிர்த்து மேல்முறையீடு – சட்டப் போராட்டத்தை மேற்கொள்வதில் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.
‘சர்வே’யினால் என்ன பலன்?
இனி ஆகமம் அல்லாத கோவில்களில் உள்ள ஆகமம் பயின்றவர்கள், ஆகமக் கோவில்களில் உள்ள முந்தைய ஆகமப் பயிற்சியே இல்லாது பல ஆண்டு களாக உள்ள அர்ச்சகர்கள் இவர்களை வீட்டுக்கனுப் பாமல் துறையும், அரசும் உள்ளபோது, நடைமுறையில் இந்த கண்டறியும் ‘சர்வே’யினால் என்ன உருப்படியான பலன் ஏற்பட முடியும்?
கலைஞர் ஆட்சியில், ஏற்கெனவே ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவே பல பிரபல கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள் ஆகமப் பயிற்சியே இல்லாதவர்கள் என்பதை அரசுக்குத் தந்த அறிக்கை யிலேயே சுட்டிக்காட்டியுள்ளது.
மதுரை மீனாட்சி கோவில், மயிலை கற்பகாம்பாள் கோவில், வடபழனி முருகன் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகம விதிமுறைப்படி கட்டப்படாத சென்னை அஷ்டலட்சுமி கோவில் போன்றவை.
108 வைணவக் கோவில்களில் 30 கோவில்களில் உள்ளவர்களுக்கே ஆகமம் தெரியும் என்று அந்த அறிக்கை கூறுகிறது!
இவற்றில் பூஜையைத் தடை செய்துவிடுவார்களா? அத்தகைய கோவில்களை மூடச் சொல்வார்களா? முடி யாத போது எதற்கு இந்த வெற்று காலதாமத முயற்சி? திசை திருப்பி, நியமனங்களைத் தடுப்பதல்லாமல் வேறு என்ன?
தடுக்கும் தந்திர உபாயம்!
இது ஒரு பயனற்ற வேலை (Futile Exercise).
அர்ச்சகர் நியமனங்களை செய்யவிடாதபடி தடுக்கும் தந்திர உபாயம்.
இது வெறும் பக்திப் பிரச்சினை அல்ல.
மனித உரிமை, சமத்துவ, சம வாய்ப்புப் பிரச்சினை – இந்த ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சியானதால் மனித உரிமைப் போராளிகள் அமைதி காக்கிறார்கள்!
இன்றேல், போராட்டத் தீ இந்நேரம் தமிழ்நாட்டில் கொழுந்து விட்டெரிந்திருக்கும்.
நமது முதலமைச்சர், தமிழ்நாடு அரசுக்கு இக்கொள்கையில் உள்ள உறுதிப்பாடும், ஈடுபாடும் நிச்சயம் நல்ல முடிவுடன் – உரிய நடவடிக்கைகள் விரைவில் தொடரும் என்று நம்புகிறோம்.
ஜாதிப் புண்ணுக்கு ஓரளவு மருந்து போடுவதாக சட்டப்படி அமைந்துள்ளது
உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஜாதிப் புண்ணுக்கு ஓரளவு மருந்து போடுவதாக சட்டப்படி அமைந்துள்ளது ஆறுதலோடு, வரவேற்று நமது சமத்துவ உரிமைக்கான அறப்போரின் நியாயத்தை இத்தீர்ப்பு பிரதிபலிப்பதாகவும் உள்ளது!