முப்படைகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் வேலைக்கு சேர 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரர்கள் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
’அக்னி வீரர் – ஆபீஸ் அசிஸ்டெண்ட், ஸ்டோர் கீப்பர்’ ஆகிய வேலைகளில் பணிபுரிய 12 ஆம் வகுப்பில் எந்த பிரிவாக இருந்தாலும் அனைத்து பாடங்களையும் சேர்த்து 60 சதவிகித மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
’அக்னி வீரர் – டிரேஸ்மேன்’ பதவிக்கு விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பில் பாஸ் ஆகி இருந்தாலே போதும். அதுபோல, இதே பிரிவிற்கு 8 ஆம் வகுப்பில் பாஸ் ஆனவர்களும் விண்ணப்பிக்கலாம்.
’அக்னி வீரர்- பொது வேலை’ என்ற பிரிவில் விண்ணப்பம் செய்வோர், 10 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களையும் சேர்த்து மொத்தம் 45 சதவிகித மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும். இலகு ரக வாகனம் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருப்போருக்கு பணி சேர்க்கையின் போது முன்னுரிமை கொடுக்கப்படும்.
’அக்னி வீரர்- டெக்னிக்கல்’ என்ற பிரிவில் விண்ணப்பிப்போர், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடமாக எடுத்து 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
அல்லது, 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக எடுத்து 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பாஸ் ஆகி ஐ.டி.ஐ முடித்து இருக்க வேண்டும்.
அல்லது, 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக எடுத்து 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பாஸ் ஆகி ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
அக்னி வீரர் வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர் 2003 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். வயதானது பதினேழரை முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உயரமானது, குறைந்தபட்சம்162 செண்டி மீட்டர் முதல் 166 செண்டி மீட்டர் இருக்க வேண்டும் என்று கிரேடு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்பளவு சாதரணமாக குறைந்தபட்சம் 77 செண்டி மீட்டர் இருக்கவேண்டும். 5 செண்டி மீட்டர் விரித்து காட்ட வேண்டும். உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும்.
தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. முன்னாள் படை வீரரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. உயரத்திலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர், உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடக்கும். பின்னர், அக்னி வீரர் பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியாகும்.
தேசப்பணியில் ஈடுபட ஆர்வமுடன் இருக்கும் இளைஞர்கள் உரிய கல்வித்தகுதியும் உடல் தகுதியும் இருந்தால் www.joinindianarmy.nic.in என்ற இணையத்தளம் வாயிலாக மார்ச் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அக்னி பாத் வேலை குறித்த முழுமையான விபரங்களை படிக்க ஆர்மி வெளியிட்ட ஆங்கில அறிவிக்கையை படிக்க INDIAN ARMY RECRUITING OFFICE (HQ) CHENNAI ONLINE CEE REGISTRATION FOR MALE AGNIVEER CANDIDATES RY 2024-25 இங்கே கிளிக் செய்யலாம்.