“கீழடியில் துலங்கி நிற்கும் தமிழ்சமூகத்தின் நாகரிக சான்றுகள் வரலாற்றின் புதிய அத்தியாயத்தை முரசறிவிப்பதாகும்” என்று முதலாம் கட்ட அகழாய்வின் பொழுது நான் எழுதிய வார்த்தைகளையே இன்றும் எழுத விரும்புகிறேன்’’ என்று கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு முடிவுற்றுள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது முகநூல் பதிவில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு முடிவுற்றுள்ளது.
அகழாய்வில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் மற்றும் அகழாய்வுக் குழிகளைக்காண தொல்லியலாளர் அமர்நாத் இராமகிருஷ்ணனும் நானும் சென்றோம். இந்த ஒன்பதாம் கட்ட அகழாய்வில் 806 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. மீன், ஏணி மற்றும் வடிவியல் சார்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பெருநகரத்தை முழுமையாக கணக்கிடவும், புரிந்துகொள்ளவும் அதனை வரையறுக்கவும் இன்னும் பல ஆண்டுகள் இந்த ஆய்வினை நடத்த வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு கட்ட ஆய்வும் தனித்துவமான பங்களிப்பை தொல்லியல் உலகிற்கு அளித்துவருகிறது.
“கீழடியில் துலங்கி நிற்கும் தமிழ்சமூகத்தின் நாகரிக சான்றுகள் வரலாற்றின் புதிய அத்தியாயத்தை முரசறிவிப்பதாகும்” என்று முதலாம்கட்ட அகழாய்வின் பொழுது நான் எழுதிய வார்த்தைகளையே இன்றும் எழுதவிரும்புகிறேன்.
கீழடி அருங்காட்சியகத்துக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1500 பார்வையாளர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் 3500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகின்றனர்.
உலகத்தரத்திலான அருங்காட்சியகமும், அதனருகே 2500 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்புற்ற ஒரு தொல்நகரத்தைப் பற்றிய தொடர் அகழாய்வும் நடந்து வருவது நம்காலத்தின் மிகமுக்கிய நிகழ்வாகும்.
வரலாறும், இலக்கியமும் செழிப்புற்று இறுகப் பிணைந்து கிடக்கும் காட்சிகளைக் காண தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாளாவது செலவிட வேண்டும்.
அகழாய்வென்பது காலத்தைப் பார்க்கும் கண்ணாடி. கீழடி என்பது வரலாறு தந்துள்ள காலப்பரிசு.