‘’ தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாள் ஆகியோர் முயற்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவன’’ என்று பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டினார்.
மனதின் குரல், 106ஆவது பகுதியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நமது இலக்கியம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினை முரசறிவித்துச் சொல்லும் மிகச் சிறப்பான ஊடகங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபோடு தொடர்புடைய இரண்டு மிகவும் உத்வேகமளிக்கும் முயற்சிகளை முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான சகோதரி சிவசங்கரி -யைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் ஒரு செயல்திட்டத்தை புரிந்திருக்கிறார் – Knit India, Through Literature. இதன் பொருள் என்னவென்றால், இலக்கியம் வாயிலாக தேசத்தை ஓரிழையில் கோர்ப்பது என்பது தான். இவர் இந்தச் செயல்திட்டம் தொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறார்.
இந்தச் செயல்திட்டம் வாயிலாக இவர் பாரதநாட்டு மொழிகள் 18இல் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் பலமுறை கன்யாகுமாரி தொடங்கி கஷ்மீரம் வரையும், இம்ஃபால் தொடங்கி ஜைசால்மேர் வரையும், தேசம் நெடுக, பல்வேறு மாநிலங்களின் எழுத்தாளர்கள்-கவிஞர்களை நேர்முகம் காண்பதற்காக சிவசங்கரி அவர்கள் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், பயணக் கட்டுரைகளோடு கூட இவற்றைப் பதிப்பித்தும் இருக்கிறார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கிறது. இந்தச் செயல்திட்டத்தின் நான்கு பெரிய தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன, ஒவ்வொரு தொகுதியும் பாரதத்தின் தனித்தனி பாகத்திற்கு என அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இவருடைய இந்த உறுதிப்பாட்டு சக்தி குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.
கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாள் அவர்களுடைய பணியும் மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாக இருக்கிறது. இவர் தமிழ்நாட்டின் கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் போற்றத்தக்க பணியைச் செய்திருக்கிறார். இவர் தனது இந்தக் குறிக்கோளோடு, கடந்த 40 ஆண்டுகளாக இணைந்திருக்கிறார். இதன் பொருட்டு இவர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணிக்கிறார், நாட்டுப்புற கலை வடிவங்களைத் தேடித்தேடி, அவற்றைத் தனது புத்தகத்தில் இடம்பெறச் செய்கிறார். இவர் இதுவரை, கிட்டத்தட்ட 100 புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.
இதைத் தவிர பெருமாள் அவர்களுக்கு மேலும் ஒரு பேரார்வமும் உண்டு. தமிழ்நாட்டின் கோயில் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இவர் தோல்பாவைக் கூத்து பற்றியும் நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இதனால் ஆதாயம் வட்டார நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கிடைத்து வருகிறது. சிவசங்கரி அவர்கள், ஏ.கே. பெருமாள் அவர்கள் – இவர்கள் இருவரின் முயற்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவன. பாரதம் தனது கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய அனைத்து முயற்சிகள் குறித்தும் பெருமிதம் அடைகிறது. இது நமது தேச ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதோடு, தேசத்தின் பெயரையும், தேசத்தின் கௌரவத்தையும், அனைத்தையும் ஓங்கச் செய்யும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.